

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் வியாழக்கிழமை துல்லிய தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜம்மு துணை கமிஷனர் சிம்ரன்தீப் சிங், "அக்னூர் மாவட்டத்தில் பல்லன்வாலா, சப்ரியர், சம்னம் பகுதிகளை ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை" என்றார்.
செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது இது 5-வது முறையாகும். கடந்த 36 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.