

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு வரும் 30-ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதற்கு ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, ஹூப்ளி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும், கன்னட அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்தும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல மண்டியா, மத்தூர், பாண்டவப்புரா உள்ளிட்ட இடங்களில் காவிரி நதி நீர் பாதுகாப்புக் குழு, கரும்பு விவசாயிகள் சங்கம், கன்னட ரக் ஷன வேதிகே, கன்னட சேனா உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
மண்டியாவில் உள்ள சஞ்சய் சதுக்கத்தில் காவிரி நதி நீர் பாதுகாப்பு குழுவின் தலைவர் மாதே கவுடா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாதே கவுடா கூறும்போது, “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், கர்நாடக அரசு தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து கர்நாடகாவை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். கர்நாடகாவுக்குச் சொந்தமான காவிரியை காக்க வீட்டுக்கு ஒருவர் வீதிக்கு வந்து போராட வேண்டும்” என்றார்.
கன்னட அமைப்புகளின் போராட் டத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய இடங்களில் வரும் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கர்நாடகாவையும் தமிழகத் தையும் இணைக்கும் 16 எல்லைகளிலும், மண்டியா, மைசூரு ஆகிய இடங்களிலும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.