குரங்கு அம்மை | டெல்லி மக்கள் பீதியடைய வேண்டாம்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது: அர்விந்த் கேஜ்ரிவால் 

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்.
அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் மக்களை பீதியடையவேண்டாம், நல்ல மருத்துவக்குழு வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தலைநகர் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருவருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பதிவில், ''டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு பயப்படும்படியாக பாதிப்புகள் எதுவும் இல்லை. அந்நோயிலிருந்து அவர் தற்போது மீண்டு வருகிறார். அதனால் மக்கள் பீதியடைய வேண்டியதில்லை. நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது.

டெல்லி அரசு எல்என்ஜேபி மருத்துவமனையில் இதற்கென்று தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளின் தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது சிறந்த குழுவினர் இந்நோய் பரவாமல் தடுக்கவும் டெல்லிவாசிகளை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.'' என்று தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் தற்போது 75 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் நால்வர் மற்றும் தாய்லாந்தில் ஒருவர் உட்பட மொத்தம் 16000 க்கும் மேற்பட்டவர்கள் இந்நோய்பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in