4 கோடி பேர் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல்

4 கோடி பேர் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகா தாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் அளித்த பதிலில், “கடந்த 18-ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் இலவச கரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 178 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 4 கோடி பேர் ஒருடோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை” என கூறப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டோரில் 98 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸும் 90 சதவீதம்பேர் 2 டோஸும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி (3-வது டோஸ்) செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணியளவில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

புதிதாக 21,411 பேருக்கு தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 21,411 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,25,997 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,50,100 ஆகி உள்ளது. இது இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 0.34 சதவீதம் ஆகும். 98.46 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

தினசரி கரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 4.46 சதவீதமாகவும் வாராந்திர சராசரி 4.46 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 201.68 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in