

மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா மீது அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மத்தியப் பிரதேச தொழில் தேர்வு வாரிய ஊழலில் முதல்வர் சவுகான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக மிஸ்ரா கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மீதும் அவரது மனைவி மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மிஸ்ரா சுமத்தியுள்ளதாக, அரசு வழக்கறிஞர் ஆனந்த் திவாரி, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுஷ்மா கோஸ்லா விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கு குறித்து அரசு வழக்கறிஞர் ஆனந்த் திவாரி கூறுகையில், “தொழில் தேர்வு வாரிய ஊழலில் கைது செய்யப் பட்டு சிறையில் இருக்கும் பங்கஜ் திரிவேதிக்கு முதல்வர் சவுகானின் மகன் சஞ்சய், தாய்மாமன் புல்சிங் ஆகியோர் போன் செய்திருப்பதாக மிஸ்ரா கூறியுள்ளார். ஆனால் புல்சிங் என்ற பெயரில் சவுகானுக்கு தாய்மாமன் யாரும் இல்லை. முதல்வரின் தாய்மாமன் ரந்தீர் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நடந்து வருகிறது. இந்த ஊழலில் தனது குடும்பத்தினருக்கு தொடர்பு இருந்தால், விசாரணைக்கு சவுகான் உத்தரவிட்டிருக்க மாட் டார். ஊழல் அதிகாரிகளுக்கு முதல்வர் வீட்டில் இருந்து 139 அழைப்புகள் சென்றிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அதன் விவரங்களை வெளியிடவில்லை” என்றார்.