

காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல் நடத்தியுள்ளதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி கூறும்போது, "கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் மோடி முதல் முறையாக செயல்பட்டிருக்கிறார். மோடிக்கு என் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பாதுகாப்பில் காங்கிரஸ் கட்சியும், ஒட்டுமொத்த தேசமும் பிரதமருக்கு துணை நிற்கும். பிரதமர் அவரது அதிகாரங்களைப் பயன்படுத்தி செயல்படும்போது அவருக்கு என்ன முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும். தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய வீரர்களுக்கு வாழ்த்துகள்.
நமது நாட்டு மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்திக் கொள்ளும் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.