வீடுதோறும் தேசியக் கொடி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

வீடுதோறும் தேசியக் கொடி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Updated on
1 min read

நாட்டின் சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் ஆக.13 முதல் 15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா' (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா அன்று அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆக.13 முதல் 15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வரலாற்றின் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றிய முதல் தேசியக் கொடியையும் பகிர்ந்துள்ளார்.

இன்று ஜூலை 22ஆம் நாள் நம் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். 1947 ஆம் ஆண்டு இதே நாளில் நம் தேசியக் கொடியை நாம் ஏற்றுக் கொண்டோம். அதன் நிமித்தமான சில வரலாற்று தருணங்கள் அடங்கிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன். மூவர்ணக் கொடியை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் விவரத்தையும் பகிர்ந்துள்ளேன். இன்று நாம், நமக்கென தனி தேசியக் கொடி வேண்டும் என்பதற்காக கனவு கண்டவர்கள், ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய தியாகிகளை நினைவுகூர்வோம். அவர்கள் கனவு கண்ட இந்தியாவை நாம் உருவாக்குவோம். ஆக.13 முதல் 15-ம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in