

ஹெலிகாப்டர் ஊழலில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர், கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 180-க்கும் மேற்பட்ட முறை இந்திய பயணம் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெற அந்த நிறுவனம் இந்தியாவை சேர்ந்த சிலருக்கு லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற, இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மிஷல், கார்லோ கெரோசா, கிடோ ஹஸ்கே ஆகியோர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து அமலாக்கத் துறையும், சிபிஐ.யும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்நிலையில், இடைத்தரகர்களில் கிறிஸ்டியன் மிஷல் என்பவர் கடந்த 2005-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு 180 முறைக்கு மேல் வந்து சென்றுள்ளார். குறிப்பாக டெல்லிக்குதான் அவர் அதிகமாக வந்துள்ளார். இந்த தகவல் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்தின் (பாரின் ரீஜினல் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் - எப்ஆர்ஆர்ஓ) மூலம் தெரிய வந்துள்ளது.
‘அபினவ் தியாகி’ என்பவரை பார்க்க வருவதாக அந்த அலுவலகத்தில் கிறிஸ்டியன் மிஷல் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் தொடங்கிய ‘மீடியா எக்ஸிம் பிரைவேட்டட் லிமிடெட்’ இயக்குநர் ஜே.பி.சுப்பிரமணியம் என்பவரை பார்க்க வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் ஊழலில் விமானப் படை முன்னாள் தளபதி தியாகி மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தியாகியின் குடும்பத்துக்கும் அபினவ் தியாகிக்கும் உள்ள உறவு முறையை கண்டறிய புலனாய்வு நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் ஹெலிகாப்டர் ஊழல் விஸ்வரூபம் எடுத்ததும் கிறிஸ்டியன் மிஷல் இந்தியாவை விட்டு சென்றதாகவும், தற்போது அவர் ஐக்கிய அரபு எமிரகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரை கைது செய்து ஒப்படைக்க அமலாக்கத் துறையினர் ஏற்கனவே அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து புலனாய்வுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘8 - 9 ஆண்டுகளில் 180 முறை இந்திய பயணம் மேற்கொள்வது கண்டிப்பாக ஆச்சரியமான விஷயம்தான். கிறிஸ்டியன் மிஷல் இந்தியா வந்த போதெல்லாம் யார் யாரை சந்தித்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவர் பெரும்பாலும் ஐந்து நட்சத்திர ஓட்டலில்தான் தங்கியுள்ளார். சப்தர்ஜங் பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்புள்ள அவருடைய பங்களா முடக்கப்பட்டுள்ளது’’ என்றார்.