

புது டெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு தேர்வாகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் பதிவான வாக்குகள், வாக்குப்பெட்டியில் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வியாழக்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திரவுபதி முர்மு பெருவாரியான வாக்குகளை பெற்று, அடுத்த குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ளார்.
விரைவில் குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரவுபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார் ராகுல் காந்தி.