Last Updated : 21 Jul, 2022 06:40 AM

 

Published : 21 Jul 2022 06:40 AM
Last Updated : 21 Jul 2022 06:40 AM

மேகேதாட்டு அணை திட்டம் குறித்து முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

பெங்களூரு / புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நாளை டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் மேகேதாட்டு திட்டத்தின்வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம்தாக்கல் செய்த மனுவில், ‘‘காவிரிமேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்கக் கூடாது’’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அபய் எஸ் ஒகா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக திறந்துவிடவில்லை.

இந்நிலையில் புதிதாக மேகேதாட்டுவில் அணை கட்டினால் காவிரி நீரைநம்பி வாழும் தமிழக விவசாயிகள் கடுமையாக‌ பாதிக்க‌ப்படுவார்கள். இந்த திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் முறையிட்டுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீட்டை கண்காணிக்க அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையத்துக்கு மேகேதாட்டு திட்ட வரைவு அறிக்கை குறித்து விவாதிக்க அதிகாரம் இல்லை. ஆணையத்தின் உறுப்பினராக உள்ள 4 மாநிலங்களில் பெரும்பான்மை மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கும் விவகாரம்குறித்து மட்டுமே விவாதிக்க முடியும்.

ஆனால் மேகேதாட்டு திட்டம்குறித்து விவாதிக்க தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கவும், ஆணையக் கூட்டத்துக்கும் தடை விதிக்க வேண்டும்'' என வாதிட்டார்.

கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் தவான், ‘‘குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைக்காக கட்டப்படும் இந்த அணையால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. எனவே இதனை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 4 மாநிலங்களும் விவா தித்து முடிவெடுக்கலாம்'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ''மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? இது பற்றி ஆணையத் தின் கருத்து என்ன? அவ்வாறு விவாதித்தாலும் மேகேதாட்டு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.

இந்த விவகாரம் 2018-ம் ஆண்டுமுதல் நீடிப்பதால், ஆணையக்கூட்டத்தை ஒருவாரத்துக்கு ஒத்திவைத்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. ஆனால் நீதிமன்றம் ஆணைய கூட்டத்துக்கு தடை விதிக்காது'' எனக்கூறி, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x