உறவுகள் மேம்பட பயங்கரவாத ஆதரவை பாக். முற்றிலும் கைவிட வேண்டும்: நரேந்திர மோடி

உறவுகள் மேம்பட பயங்கரவாத ஆதரவை பாக். முற்றிலும் கைவிட வேண்டும்: நரேந்திர மோடி
Updated on
1 min read

இந்திய-பாகிஸ்தான் உறவுகளுக்கு இடையே பாகிஸ்தான் தன் மீதே சுமத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாத ஆதரவு என்ற தடைக்கல் உள்ளது. இதனை பாகிஸ்தான் அகற்றிவிட்டால் உறவுகள் சீர்படும் என்று நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி இது குறித்து கூறியதாவது:

“என்னைப் பொறுத்தமட்டில் இருநாட்டு உறவுகள் மிகப்பெரிய உயரத்துக்குச் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் தன் மேலேயே சுமத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாத ஆதரவு என்ற தடைக்கல்லை அகற்றி விட்டால் நிச்சயம் புதிய உறவு மலரும்.

நாங்கள் இதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் இறங்க தயார், ஆனால் அமைதி, சமாதானத்திற்கான பாதை என்பது இருவழிப்பாதையாகும். ஆம். பாகிஸ்தான் தனது பங்கை நிச்சயம் ஆற்றவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இருநாடுகளும் ஒருவரையொருவர் பகைமை பாராட்டுவதை விடுத்து வறுமையை ஒழிப்பதில் கவனம் செலுத்தினால் நல்லது என்று நான் எப்போதும் நினைக்கிறேன்.

பயங்கரவாத விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பயங்கரவாதத்திற்கு அரசு சார்ந்த உதவிகளோ அல்லது அரசு சாராத உதவிகளோ எதுவாக இருந்தாலும் நிறுத்தப்பட்டால்தான் அதனை ஒழிக்க முடியும்.

பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டி விடுபவர்கள், செய்பவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க மறுப்பதே இருநாடுகளும் பேச்சு வார்த்தையை முன்னெடுத்துச் செல்ல பெரும்தடையாக உள்ளது.

இந்தியாவுக்காக நான் என்ன எதிர்காலத்தை விரும்புகிறேனோ, அதே எதிர்காலத்தைத்தான் நம் அண்டைநாடுகளுக்காகவும் நான் கனவு காண்கிறேன். நான் லாகூருக்குப் பயணம் மேற்கொண்டது எனது இந்த நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடுதான்.

அணிசாரா நாடு என்ற பாரம்பரியமான நிலைப்பாட்டை இந்தியா மாற்றி கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் முன்பு போல் அல்லாமல் இந்தியா இப்போது மூலையில் இல்லை. இந்தியா தற்போது மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் வெகுவேகமாக வளரும் பொருளாதாரமாகும்.

எனவே இந்த பிராந்தியத்திலும் சரி, சர்வதேச அளவிலும் சரி நாங்கள் எங்கள் பொறுப்புகளை உணர்ந்துள்ளோம்” என்று கூறினார்.

மோடியிடம் மேலும் ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது:

“அதாவது அமெரிக்கா இந்தியா மீது கவனம் செலுத்துகிறது. இந்தியா வளர்ந்து வரும் ஒரு சக்தி. எனவே அணி சேராவிட்டாலும், சீனாவுடனான விவகாரங்களை எடுக்கும் குழுவின் ஒரு பகுதியாக இந்தியா செயல்படுமா? உலக அரங்கில் இந்தியா நிலைப்பாடு என்ன?”

இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “சீனாவுடன் எந்த வித சண்டையும் இல்லை. எல்லைப் பிரச்சினை உள்ளது. ஆனால் பதற்றமோ, சண்டையோ இல்லை. மக்களுக்கு இடையேயான தொடர்பு அதிகரித்துள்ளது. வாணிபம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சீனாவின் முதலீடு அதிகரித்துள்ளது, சீனாவில் இந்தியாவின் முதலீடும் அதிகரித்துள்ளது. எல்லை விவகாரம் உள்ளதே தவிர, 30 ஆண்டுகளில் ஒரு தோட்டா கூட சுடப்பட்டதில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in