

மேற்குவங்க மாநில சட்டப் பேரவை தேர்தல் 6 கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 1,961 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஆராய்ந்த மேற்குவங்க மாநில தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த கூட்ட மைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் திரிணமூல் காங்கிரஸ் 114 பேருடன் முதலிடத்தை பிடித்துள்ளது. பாஜக (46 பேர்), காங்கிரஸ் (31 பேர்), சுயேச்சை (19), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (13), பகுஜன் சமாஜ் (4) உள்ளிட்ட கட்சிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
244 கோடீஸ்வர வேட்பாளர் களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.60.11 லட்சம் ஆகும். இதில் அதிகபட்சமாக தற்போதைய எம்எல்ஏக்கள் 3 பேரின் சொத்து மதிப்பு மட்டும் 500 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. பேரிடர் மேலாண்மை அமைச்சரான ஜாவெப் கான் 2011 தேர்தலில் போட்டியிடும்போது அவரது சொத்து மதிப்பு ரூ.2.16 கோடி என கணக்கு காட்டியிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் அவருக்கு ரூ.17.29 கோடி சொத்து இருப்பதாக தெரிவித் துள்ளார்.
இது கிட்டத்தட்ட 598 சதவீத அளவுக்கு உயர்வாகும். அடுத்தபடியாக திரிணமூல் எம்எல்ஏ சவுமென் குமார் மகாபத்ரா, அமித் மித்ரா ஆகியோரது சொத்துக்களும் 344 சதவீதம் வரை உயர்ந் துள்ளன.
கிரிமினல் வழக்குகளில் தொடர் புடைய 354 வேட்பாளர்களில், திரிணமூல் கட்சியில் இருந்து மட்டும் 86 வேட்பாளர்கள் உள்ளனர். அடுத்தபடியாக பாஜக 66, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 58 மற்றும் காங்கிரஸில் 41 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மிக மோசமான கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 294 வேட்பாளர்களில் திரிணமூல் காங்கிரஸ் 76 பேரை களமிறக்கி முதலிடத்தை பிடித்துள்ளது.