Last Updated : 15 May, 2016 08:52 AM

 

Published : 15 May 2016 08:52 AM
Last Updated : 15 May 2016 08:52 AM

பிஹார், ஜார்க்கண்டில் பயங்கரம்: 2 பத்திரிகையாளர் சுட்டுக் கொலை - சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை

பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 24 மணி நேரத்தில் இரு பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஹாரிலிருந்து வெளியாகும் ‘இந்துஸ்தான்’ இந்தி நாளிதழின் சிவான் மாவட்ட முதன்மை செய்தியாளராக இருந்தவர் ராஜ்தேவ் ரஞ்சன் (46). நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

சுமார் 25 ஆண்டுகளாக சிவானில் பணியாற்றி வந்த ராஜ்தேவ், சிறையில் உள்ள முகமது சகாபுதீன் உள்ளிட்ட பிரபல கிரிமினல்களின் நடவடிக்கைகளைப் பற்றி இந்தி நாளிதழில் எழுதி வந்தார். 2004-ம் ஆண்டில் இருவரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சகாபுதீன் சிறையில் உள்ளார்.

இதுகுறித்து சிவான் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சவுரவ் குமார் கூறும்போது, “ராஜ்தேவை எத்தனை பேர் சுட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் ஒரு குறிப்பிட்ட கிரிமினல் கும்பலைச் சேர்ந்த நால்வரை பிடித்து விசாரித்து வருகிறோம். எங்களுக்கு உதவுவதற்காக பாட்னாவில் இருந்து சிறப்புப் படையினர் வந்துள்ளனர்” என்றார்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 12 மணி நேரம் முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலம் சத்ராவில், பிராந்திய இந்தி தொலைக்காட்சி சேனலின் நிருபர் இந்திரதேவ் யாதவ் (35) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரதேவுக்கு மனைவி, 13 வயது மகள் மற்றும் 7 வயது மகன் உள்ளனர்.

இதுகுறித்து சத்ரா மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அஞ்சனி குமார் ஜா கூறும்போது, “சம்பவம் நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகவும் இரவு நேரமாகவும் இருந்ததால் கண்ணால் பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. எனினும் சந்தேகத்தின் பேரில் ஒரு எம்எல்ஏவின் நெருங்கிய சகாவை பிடித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x