உத்தரப் பிரதேச லூலூ மாலில் மத வழிபாடுகள்: முதல்வர் யோகி எச்சரிக்கை

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லூலூ மாலில் சிலர் தொழுகை நடத்திய சம்பவம் சர்ச்சையான நிலையில், “இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது, மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் "சிலர் தேவையற்ற தடைகளை ஏற்படுத்துகின்றனர். பொது இடங்களில் மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். லக்னோ நிர்வாகம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அபுதாபியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசூப் அலி மா, உலகம் முழுவதும் 'லூலூ மால்' என்ற வணிக வளாகங்களை நடத்தி வருகிறார். உத்தரப் பிரதேசத்தில் அமைந்த லூலூ மால் வணிக வளாகத்தை கடந்த ஜூலை 10-ஆம் தேதியன்றுதான் முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

இந்நிலையில், ஜூலை 12ஆம் தேதி அந்த மாலில் முஸ்லிம்கள் சிலர் தொழுகையில் ஈடுப்பட்டனர். அவர்கள் மாலில் தொழுகை நடத்தும் வீடியோ வைரலானது. இதனையடுத்து லூலூ மால் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரிலும், சில இந்து அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் சில வலதுசாரி அமைப்புகள் லூலூ மாலில் அனுமன் சாலிஸா, பாராயணம் செய்ய அனுமதி கோரினர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாறாக நமாஸ் செய்ய, அனுமன் சாலீஸா பாராயணம் செய்ய என மாறி மாறி முற்பட்ட நபர்கள் இருதரப்பில் கைதாகியுள்ளனர். இதுவரை 10 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், லூலூ மாலின் வெளியே ஒரு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் லூலூ மால் உள்ளே எந்த விதமான மத வழிபாடுகளுக்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in