

மும்பையில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி விருஷாலி ஜோஷி, "கீனன், ரூபன் ஆகிய இரண்டு இளைஞர்களையும் கொலை செய்த ஜிதேந்திர ரானா, சதீஷ் துல்கஜ், சுனில் போட், தீபக் திவால் ஆகிய நான்கு பேருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. சாகும் வரை அவர்கள் சிறையில் இருக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக கீனன், ரூபன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நடந்தது என்ன?
அக்டோபர் 20, 2011: கீனன் சான்டோஸ், ரூபன் பெர்னாண்டஸ் ஆகியோர் அவர்களது தோழிகளுடன் மும்பை அந்தேரியில் உள்ள அம்போலி உணவு விடுதிக்குச் சென்றிருந்தனர். உணவு முடித்து வெளியில் அவர்கள் வந்தபோது அருகிலிருந்த பீடா கடையில் நின்றிருந்த இளைஞர்கள் சிலர் கீனன், ரூபன் தோழிகளை அநாகரிகமாக விமர்சித்தனர்.
இதனை கீனன், ரூபன் தட்டிக் கேட்டனர். வாக்குவாதத்துக்குப் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே அயுதங்களுடன் வந்த கும்பல் கீனன் மற்றும் ரூபனை கத்தியால் குத்தியது. கீனன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரூபன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டிசம்பர் 9 2011: தங்கள் தோழிகளை காப்பதற்காக உயிரிழந்த கீனன், ரூபன் இருவருக்கும் வீரதீர செயலுக்காக காட்ஃபிரே பிலிப்ஸ் வீரதீர விருது வழங்கப்பட்டது.
பிப்ரவரி 8, 2012: இந்த கொலை வழக்கு விசாரணை மும்பை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பில் பிரபல வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் ஆஜரானார்.
மார்ச் 19 2013: வழக்கு விசாரணை மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
மே 5 2016: குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் (ஜிதேதிர ரானா, சதீஷ் துல்கஜ், சுனில் போட், தீபக் திவால் மீதான குற்றங்களும் நிரூபணமாகின. எனவே அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என மும்பை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.