

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரையுங்கள் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. வரும் 26-ம் தேதி மோடி அரசு 2 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது. இதுதொடர்பாக பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
1975-ம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் குறித்தும் ஜனநாயகத்தை நசுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மத்திய அரசின் 2 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்து மக்களிடம் விளக்க வேண்டும்.
மத்திய அமைச்சர்கள் நாட்டின் 200 முக்கிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்த வேண்டும். ஒவ்வொரு எம்.பி.யும் தனது தொகுதியில் மாதத்துக்கு ஒருநாளாவது தங்கி மக்களுடன் கலந்துரையாட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் தடுத்து வருகிறது. இதுகுறித்து மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.