Published : 05 May 2016 08:23 AM
Last Updated : 05 May 2016 08:23 AM

காட்டுத் தீயால் இமயத்தின் பனிமலைகள் உருகாது: இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி தகவல்

மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ இமாச்சலப் பிரதேசத்துக்கு பரவியிருக்கும் நிலையில், இந்தத் தீயால் பனிமலைகள் உருகக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தீயினால் பனிமலைகள் உருகுவதற்கு சாத்தியம் இல்லை என்கிறார் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இருக்கும் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த விஞ்ஞானியான ரமேஷ்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சுமார் 2,269 ஏக்கர் வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றியிருக்கிறது. மொத்தம் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள் ளன. இந்த காட்டுத் தீ இமாச் சலப் பிரதேசத்துக்கும் பரவத் தொடங்கியிருக்கும் நிலையில் நாடு முழுவதும் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இமாச்சல பிரதேசத்தில் பரவிய காட்டுத் தீயால் பனிமலை உருகும்; மலையடி ஊர்களிலும் ஆறுகளில் கடுமை யான வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று அச்சத்தை வெளிப்படுத்தி னார்கள். ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை என்கிறார் இமயமலை குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானி ரமேஷ்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

உத்தராகண்ட் மற்றும் இமாச் சலப் பிரதேசத்தில் வழக்கமாக பிப்ர வரி தொடங்கி ஜூலை வரை ஆங் காங்கே காட்டுத் தீ ஏற்படுவது இயல் பான ஒன்றுதான். ஆனால், 2,000 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் மிகப் பெரிய அளவில் காட்டுத் தீ பரவியிருப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முக்கியக் காரணம், இமயமலை முன்பு எப்போதும் இல் லாத வகையில் கடும் வறட்சியில் சிக்கியிருக்கிறது. உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு சராசரியாக 35 முதல் 38 செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. இது வழக்கத்தைவிட சுமார் 3 முதல் 4 செல்சியஸ் அதிகம். உலகளவில் ஏற்பட்ட பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம். தவிர, இங்கே கடல் பகுதிகள் இல்லாததால் காற்றில் ஈரப்பதமும் இருக்காது.

காட்டுத் தீக்கு காரணமான சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் பருவ நிலை மாற்றம்தான் உண்மை யான காரணம். விளைச்சலுக்காக வும் மரங்களுக்காகவும் சிலர் அங் கொன்றும் இங்கொன்று மாக தீ வைத்திருக்கலாம். ஆனால், அதனால் எல்லாம் இதுபோன்ற பெரிய அளவிலான காட்டுத் தீ பரவாது. தற்போது ஊசியிலை மற்றும் சமவெளிக் காடுகளில் மட்டுமே தீ பற்றியிருக்கிறது. ஊசியிலைக் காடுகளில் தற்போது இலையுதிர் காலம் நிலவுகிறது. காடு முழுவதும் வறண்டு காய்ந்த சருகுகள் இரண்டு அடி உயரத்துக்கு மேல் போர்த்தியிருக்கிறது. மரத்தின் காய்ந்த கிளைகள் வெப்பக் காற்றில் உராயும்போது தீ ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. தவிர, ஊசியிலை மரத்தின் இலைகள் அமிலத் தன்மை கொண்டவை. இதுவே தீ வேகமாக பரவ வாய்ப்பாக அமைந்துவிட்டது.

தீத்தடுப்புக் கோடுகள் பல இடங்களில் சரியாக பராமரிக்கப் படவில்லை. இதற்கு முக்கியக் காரணம், உத்தராகண்ட் வனத்துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறைதான். சுமார் 100 சதுர கி.மீட்டர் பரப்பளவு ஒரு வன மண்டலமாக வரையறுக்கப்பட் டுள்ளது. இது மிக அதிகம். 200 முதல் 300 சதுர கி.மீட்டர் பரப்பளவை ஒரு வன சரகர் பராமரிக்க வேண்டியிருக்கிறது. இது சாத்தியம் இல்லாதது. தவிர, இயற்கையாக அமைந்த தீத்தடுப்பு கோடுகளான ஓடைகள், ஆறுகள், ஏரிகளும் வற்றிவிட்டன. அவற்றில் கோடை காலத்தில் முளைத்துள்ள காய்ந்த புல்வெளிகள் தீயை மேலும் பரவச் செய்துவிட்டன.

இமாச்சலப் பிரதேசத்தில் பெரும் பாலான மக்களின் வாழ்வாதாரம் காடுகள்தான். விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு வன மகசூல், மீன் பிடி தொழில்கள் அனைத்தும் காட்டை சார்ந்தே இருக்கிறது. அவர்களுடனான உறவை வனத்துறை மேலும் மேம்படுத்த வேண்டும். முன்னெச் சரிக்கை நடவடிக்கை மற்றும் தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சுற்றுலா பயணிகளால் காட்டுக்குள் தூக்கி எறியப்படும் கண்ணாடி பாட்டில்களில் சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு, ஒளிக்குவிதல் மூலமும் காட்டுத் தீ உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் மத்திய அரசின் பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கத் திட்டத்தில் கோடை காலங்களில் மலைப் பகுதிகளில் வறட்சியைத் தடுக்க திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தற்போது இமயமலையில் பரவிவரும் காட்டுத் தீ ஒரளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இமய மலையில் காட்டுத் தீ பரவியதை அடுத்து, பனி மலை உருகும், பெரும் பிரளயம் ஏற்படும் என்றெல்லாம் வதந்திகள் பரவி வருகிறது. அது முற்றிலும் சாத்தியம் இல்லாதது. ஏனெனில் இமய மலையில் ஏழாயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் பகுதியில் மட்டுமே பனிமலை முகடுகள் இருக்கின்றன. அதற்கும் கீழாக கீழ்கண்ட வரிசையில் புல்வெளிக் காடுகள், சோலைக் காடுகள், ஓக் மரக் காடுகள், ஊசியிலைக் காடுகள், சமவெளிக் காடுகள் இருக்கின்றன. தற்போது காட்டுத் தீ சமவெளி மற்றும் ஊசியிலை காடுகளில் மட்டுமே பற்றியிருக்கிறது. எனவே, பல ஆயிரம் மீட்டர் உயரத்தை தாண்டி தீ பரவுவது சாத்தியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x