சேலம் முழுவதும் இஎஸ்ஐ திட்டத்தை அமலாக்குக: மக்களவையில் திமுக எம்.பி பார்த்திபன் கோரிக்கை

சேலம் முழுவதும் இஎஸ்ஐ திட்டத்தை அமலாக்குக: மக்களவையில் திமுக எம்.பி பார்த்திபன் கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: சேலம் மாவட்டம் முழுவதிலும் இ.எஸ்.ஐ திட்டத்தை அமலாக்க வேண்டும் என்று சேலம் மக்களவைத் தொகுதி திமுக எம்.பியான எஸ்.ஆர்.பார்த்திபன் திங்கள்கிழமை கேரிக்கை எழுப்பினார்.

இது குறித்த கோரிக்கையை திமுக எம்பியான எஸ்.ஆர்.பார்த்திபன் விதி எண் 377 -ன் கீழ் விடுத்ததில் பேசியதாவது: "சேலம் உருக்கு ஆலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இதுவரை இஎஸ்ஐ வசதி கிடைக்கவில்லை. பலமுறை எஸ்.எஸ்.பி அலுவலகத்திலும் ஒப்பந்தக்காரர் இடமும் கேட்டும் பயன் இல்லை. ஆனால், இங்கு பணிபுரியும் இண்டிசெர்வ் மற்றும் செக்யூரிட்டி பணியாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் விசாரித்தபோது சேலம் உருக்கு ஆலை இன்றுவரை இஎஸ்ஐ திட்டம் செயல்படுத்தப்படாத பகுதியில் உள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ பலன் வழங்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

எனவே, சேலம் மாவட்டம் முழுவதும் இஎஸ்ஐ சலுகை திட்டத்தை விரிவுபடுத்தும் பணியை உடனே செயல்படுத்திட வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் தங்கள் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்.

இதன் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் இஎஸ்ஐ வசதியை பெற்று அவர்கள் வாழ்க்கையை வளமாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in