

இந்தியா - வங்கதேச எல்லை பிரச்சினை சுதந்திரத்துக்குப் பிறகு தொடர்ந்து நீடித்து வந்தது. வங்கதேச எல்லைக்குள் உள்ள பகுதிகளில் இந்தியர்கள் அதிகமா னோர் வசித்தனர். அதேபோல் இந்திய எல்லை பகுதிக்குள் வங்கதேசத்தினர் ஏராளமானோர் வசித்தனர். இவர்கள் குடியுரிமை, ஓட்டுரிமை கிடைக்காமல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் இந்திய அரசிய லமைப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. அதன்பிறகு வங்கதேசத் தினர் அதிகம் வசிக்கும் 111 பகுதிகள் அந்த நாட்டுக்கும், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் 51 பகுதிகள் இந்தியாவுக்கும் பரிமாற்றம் செய்து கொள்ளப் பட்டன. அந்த 51 பகுதிகளில் மேற்குவங்கத்தில் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள தின்ஹடா சட்டப்பேரவைத் தொகுதியும் வந்தது. அந்தத் தொகுதி மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உட்பட இந்தியருக்கான எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டன.
மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைக்கு நேற்று கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. நேற்று எல்லை பரிமாற்றத்துக்குப் பிறகு குடியுரிமை பெற்ற மக்கள் முதல் முறையாக வாக்களிக்க ஆர்வமுடனும், பரபரப்புடனும் இருந்தனர். அவர்களில் 103 வயதான அஸ்கார் அலி என்ற முதியவரும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக இந்த வாய்ப்புக்காக ஏங்கி தவித்த அஸ்கார் அலி, நேற்று அதிகாலையிலேயே வாக்க ளிக்க பரபரப்பாக தயாரானார்.
மூன்று தலைமுறை உறவினர் களுடன் உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு சென்று வாழ்நாளில் முதல் முறையாக நேற்று வாக்களித்தார் அஸ்கார் அலி. வாக்குச் சாவடியில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியில் வந்த அவர், கேமராமேன்கள் படம் எடுக்க சந்தோஷமாக போஸ் கொடுத்தார்.
‘‘என்னுடைய கனவு இன்று உண்மையானது. இப்போதுதான் எனக்கு திருப்தியாக இருக்கிறது. அடுத்த தேர்தலுக்கு நான் இருப்பேனா தெரியவில்லை’’ என்று அஸ்கார் அலி கூறினார்.
அவருடன் பேரன் ஜெய்னல் அபிதின் வந்திருந்தார். அவர் கூறுகையில், ‘‘வாக்காளர் அட்டை வழங்கப்பட்டதில் இருந்து தாத்தா உணர்ச்சிவசப்பட்டவராகவே இருந்தார்’’ என்றார். 103 வயதான அஸ்கார் அலிக்கு 2 மகன்கள், 5 மகள்கள். ஏராளமான பேரன், பேத்திகள் உள்ளனர்.