Published : 17 Jul 2022 05:39 AM
Last Updated : 17 Jul 2022 05:39 AM

குஜராத் கலவர வழக்கு | மோடியை சிக்க வைக்கும் சதியின் பின்னணியில் சோனியா காந்தி - பாஜக பகிரங்க குற்றச்சாட்டு

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில், பிரதமர் மோடி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இதையடுத்து குஜராத் கலவர வழக்கில் மனுதாரராக இருந்த தீஸ்தா சீதல்வாட்டையும், பொய் ஆதாரங்களை திரட்டிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீ குமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோரை குஜராத் போலீசார் கைது செய்தனர்.

தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில் , ‘‘கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்குப் பின், மாநில அரசை கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த அகமது படேல் சதி திட்டம் தீட்டினார்.

அதில் தீஸ்தா சீதல்வாட்டுக்கும் பங்கு உண்டு. குஜராத் கலவர வழக்கில், பா.ஜ.க மூத்த தலைவர்களை தவறாக சிக்கவைக்க, இவர் டெல்லியில் ஆட்சியில் இருந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பதை தீஸ்தா சீதல்வாட் வழக்கமாக கொண்டிருந்தார். அந்த கட்சியிடமிருந்து சட்ட விரோதமாக பணம் மற்றும் வெகுமதிகளை பெற்றார்’’ என கூறியது.

இந்நிலையில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த அகமது படேல் மூலமாக, குஜராத்தில் பா.ஜ.க அரசை கவிழ்க்கவும், அப்போதைய முதல்வர் மோடியின் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இது தொடர்பாக சோனியா காந்தி பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ், ‘‘பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த மதக் கலவரத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என காட்டுவதற்காக அவர் வகுத்த வியூகத்தின் ஒரு பகுதியாக அகமது படேல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் அரசியல் பழிவாங்கும் இயந்திரம், மறைந்த அரசியல் எதிரிகளைக்கூட விட்டுவைக்கவில்லை. தனது அரசியல் தலைவர் சொல்வதற்கு கேற்ப சிறப்பு புலனாய்வு குழு செயல்படுகிறது’’ என கூறியுள்ளது.

காங்கிரஸ் அறிக்கைக்கு பதில் அளித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் அறிக்கை குறும்புத்தனமானது. மறுப்பு அறிக்கைகளை காங்கிரஸ் தயார் நிலையில் வைத்து தேதிகளை மாற்றி வெளியிடுவதுபோல் தெரிகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும். எனது பேட்டி அகமது படேல் மீதான தாக்குதல் அல்ல. அவர் மூலமாக செயல்பட்டது சோனியா காந்திதான்.

குஜராத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், பிரதமர் மோடியை ஓரங்கட்டவும் சோனியா காந்தி சதி திட்டம் தீட்டினார். குஜராத் கலவர வழக்குகளை தொடர்ந்த தீஸ்தா சீதல்வாட்டின் தனிப்பட்ட செலவுக்கு அகமது படேல் ரூ.30 லட்சம் வழங்கினார். சோனியா காந்தி கொடுத்த பணத்தைதான் அகமது படேல் வழங்கினார். காங்கிரஸ் ஆட்சியில், சீதல்வாட்டுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த வழக்கில் உள்ள உண்மை தானாக வெளிவருகிறது. பழிவாங்கும் நோக்கில் பா.ஜ.க செயல்படவில்லை. பொறுமையுடன் செயல்படுகிறது. இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x