மோடிக்கு எதிராக குறுக்கெழுத்துப் போட்டி: கேரளத்தில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது

மோடிக்கு எதிராக குறுக்கெழுத்துப் போட்டி: கேரளத்தில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது
Updated on
1 min read

பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளை பதியும் வகையிலான குறுக்கெழுத்துப் போட்டியை கல்லூரிப் பத்திரிகை இதழில் வெளியிட்டதற்காக, மாணவர்கள் 9 பேரை கேரள காவல் துறை கைது செய்தது. கேரளத்தின் குருவாயூரில் உள்ளது ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி. தி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயில் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் இக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் பத்திரிகை இதழில் ஒரு குறுக்கெழுத்துப் போட்டி இடம்பெற்றிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையிலும், வெறுக்கத்தக்க வார்த்தைகளாலும் குறுக்கெழுத்துப் போட்டி நிறைந்திருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரிப் பத்திரிகை இதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பு வகித்த 9 மாணவர்களை ஞாயிற்றுக்கிழமை போலீஸ் கைது செய்தது. அந்த மாணவர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கல்லூரி நிர்வாகத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முன்னதாக, கேரள மாநிலத்தில் மோடியின் படத்தை ஹிட்லர், பின்லேடன் வரிசையில் கல்லூரி மலரில் வெளியிட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், பேராசிரியர், மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் கல்லூரி மலரில் மோடிக்கு எதிராக அவதூறான கருத்தை வெளியிட்டதாக கேரளத்தில் மேலும் ஒரு கல்லூரி முதல்வர் மற்றும் 11 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in