Published : 15 Jul 2022 04:37 AM
Last Updated : 15 Jul 2022 04:37 AM

உலக நாடுகளுக்கு உணவு வழங்குவோம் - ஐ2யு2 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ஐ2யு2 மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் யாகிர் லாபிட், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது.படம்: பிடிஐ

புதுடெல்லி: உலகின் உணவு பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய ஐ2யு2 நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 அக்டோபரில் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து ஐ2யு2 என்ற கூட்டமைப்பை உருவாக்கின. இதன் முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் 4 நாடுகளின் தலைவர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஐ2யு2 கூட்டமைப்பில் ஒத்த கருத்துடைய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நீர்வளம், எரிசக்தி, போக்குவரத்து, சுகாதாரம், விண்வெளி, உணவு பாதுகாப்பில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி உலகின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதிலும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதிலும் ஐ2யு2 நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்.

உலக பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் புதிய கூட்டமைப்பு சர்வதேச பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முன்மாதிரியாக செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.

200 கோடி டாலர் முதலீடு

மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “இந்தியாவின் உணவு பூங்கா திட்டங்களில் ஐக்கியஅரபு அமீரகம் 200 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்யும். இதற்கு தேவையான நிலங்களை இந்தியா வழங்கும். வேளாண் தொழில்நுட்பங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் வழங்கும். இதன் மூலம் உணவு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x