Published : 15 Jul 2022 04:43 AM
Last Updated : 15 Jul 2022 04:43 AM
புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூக்கில்ஸ்பிரே செய்யப்படும் நைட்ரிக்ஆக்சைடு மருந்தை, மும்பையைச் சேர்ந்த கிளன்மார்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் 20 இடங்களில் கரோனா அறிகுறி உள்ள தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாத 306 பேரிடம் இந்த மருந்து 3 கட்டமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
அதிக அபாயம் உள்ள கரோனா நோயாளிகளிடம் மூக்கில் ஸ்பிரே மருந்து செலுத்திய 24 மணிநேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு 94 சதவீதம் குறைந்தது. 48 மணி நேரத்தில் 99 சதவீதம் குறைந்ததாக ‘தி லான்சட்ரீஜினல் ஹெல்த் சவுத்ஈஸ்ட் ஆசியா’ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூக்கில் ஸ்பிரே செய்யப்படும் நைட்ரிக் ஆக்சைடு மருந்தை, கரோனா நோயாளிகள், நாள் ஒன்றுக்கு 6 முறை தாங்களாகவே செலுத்திக் கொள்ளலாம். ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் முடிவுகள் இந்த பரிசோதனையில் மதிப்பீடுசெய்யப்பட்டன. டெல்டா, ஒமிக்ரான் தொற்று அதிகரித்தபோதுஇந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என இரு தரப்பினரிடமும் ஒரே மாதிரியான முடிவுகள் கண்டறியப்பட்டன.
நைட்ரிக் ஆக்சைடு மருந்து மூக்கு வழியாக வைரஸ் நுழைவதை தடுத்து, உள்ளே இருக்கும் வைரஸையும் கொல்கிறது. வைரஸ் பல மடங்காக பெருகுவதையும் இந்த மருந்து தடுக்கிறது.
அதனால் வைரஸ் பாதிப்பு விரைவாக குறைகிறது என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா மேலாண்மையில் மூக்கில் ஸ்பிரே செய்யப்படும் நைட்ரிக் ஆக்சைடு மூலமான இந்த சிகிச்சை மிக முக்கியமான பங்களிப்பாக கருதப்படுகிறது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT