உஜ்ஜயினி கும்பமேளாவில் தலைமை பதவிக்காக சாதுக்கள் துப்பாக்கிகளுடன் மோதல்: 14 பேர் படுகாயம்

உஜ்ஜயினி கும்பமேளாவில் தலைமை பதவிக்காக சாதுக்கள் துப்பாக்கிகளுடன் மோதல்: 14 பேர் படுகாயம்
Updated on
1 min read

ம.பி. மாநிலம் உஜ்ஜயினியில் கடந்த ஏப்ரல் 22 முதல் துவங்கி சிம்மஹஸ்தா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் சாதுக்களின் சபை தலைவர் பதவிக்கான தேர்தலில் இரு கோஷ்டிகள் நேற்று துப்பாக்கிகளால் சுட்டு மோதிக் கொண்டனர். இதில் 14 பேர் படுகாயமடைந்தனர்.

நாட்டின் ஒவ்வொரு புண்ணியத்தலங்களில் நடைபெறும் கும்பமேளாக்களில் அஹடாக்கள் எனப்படும் சாதுக்களின் சபை உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவது வழக்கம். பல்வேறு வகை அஹாடாக்களை சேர்ந்த இந்த சாதுக்கள் தங்கள் புதிய தலைவர்களை இதுபோன்ற கும்பமேளாக்களில் தேர்ந்தெடுப்பது உண்டு. இதற்காக, வாய்மொழி மற்றும் தேர்தல் முறையில் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் சுமார் நான்கு வருடங்களுக்கு பின் வரும் அடுத்த கும்பமேளா வரை அந்த அஹாடாக்களின் தலைவர்களாக இருப்பார்கள்.

இந்நிலையில், வாரணாசியை தலைமையிடமாகக் கொண்ட அவ்ஹன் அஹாடாவின் தலைவர் பதவிக்கு நேற்று கும்பமேளா பகுதியில் தேர்தல் நடைபெற்றது. இதில், பிரஜேஷ்புரி மஹராஜ் மற்றும் கணேஷ் புரி மஹராஜ் ஆகிய இரு சாதுக்கள் போட்டியிட்டனர். அப்போது இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே திடீர் என கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிகளால் சுட்டும், திரிசூலங்களில் குத்திக் கொண்டும் மோதினர்.

இதனால், அந்த அஹடாவின் மூத்த சாதுவான ஓம்புரி மஹராஜ் என்பவரது உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து நள்ளிரவில் துப்பாக்கி குண்டை அகற்றினர். நாகா சாதுக்களின் ஒரு பிரிவான அவ்ஹன் அஹாடாவினர் மூர்க்கத்தனமான மோதலுக்கு பெயர் போனவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இந்த தகவல் அறிந்து சம்பவம் நடந்த சாதுக்களின் கூடாரத்திற்கு மற்ற அஹாடாக்களின் சாதுக்கள் நேரில் வந்து அமைதிப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்யப்படவில்லை. இதில் படுகாயம் அடைந்த 14 சாதுக்களும் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்ய விரும்பவில்லை என கூறியுள்ளனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்து மதத்தை காப்பதற்காக இந்த அஹடாக்கள் உருவானதாகக் கருதப்படுகிறது. உஜ்ஜயினியின் கும்பமேளா வரும் மே 21 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in