

பிஹாரில் கடந்த ஏப்ரல் 5 முதல் முழு மதுவிலக்கு அமல்படுத்தியதை அடுத்து அதன் அண்டை மாநிலமான உ.பி.க்கு மது அருந்த படை எடுப்பதால் அங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
பிஹாரின் எல்லையை ஒட்டி உ.பி.யில் குஷிநகர், மஹராஜ்கன்ச், சண்டவுலி, தியோரியா, பலியா, காஜிபூர் மற்றும் சோன்பத்ரா ஆகிய 7 மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் இருந்து சில மாவட்டங்கள் மிக நெருக்கமாக ஒருசில கி.மீ தூரங்களில் பிஹார் அமைந்துள்ளது. உ.பி.யின் இன்னும் சில மாவட்டங்களுக்கு பிஹாரின் நதிகளை படகுகளில் கடந்தால் சில நிமிடங்களில் அடைந்து விடலாம். இவை அனைத்திலும் உ.பி.யின் உள்நாட்டு மதுவகைகள் கடைகளில் கிடைக்கின்றன. இந்த நிலையை சாதகமாக்கி மது பழக்கம் கொண்ட பிஹார்வாசிகள் அன்றாடம் உ.பி.க்கு வந்து செல்கின்றனர். இதனால், உ.பி.யின் 7 எல்லை மாவட்டங்களின் மதுக்கடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
உதாரணமாக, பிஹாரின் பக்ஸர் மாவட்ட கிராமவாசிகளின் எல்லையில் உள்ள உ.பி.யின் பலியா மாவட்டத்தில் பவுரோலி அமைந்துள்ளது. இங்கு அன்றாடம் மாலை வேளைகளில் பிஹார்வாசிகள் சென்று மது அருந்தி திரும்புகின்றனர். இதேபோல் சண்டவுலி மாவட்டத்தில் பிஹார் எல்லையில் நவுபாத்பூர் அமைந்துள்ளது. இதற்கு பக்ஸரின் துர்காவதி தாலுக்காவில் இருந்து கர்மநஷா நதி வழியாக சுமார் 20 நிமிடங்களில் மது அருந்துவதற்காகக் கரையைக் கடக்கின்றனர். எனவே, இந்த எல்லை ஓர பிஹார்வாசிகளுக்கு தம் மாநிலத்தில் உள்ள முழு மதுவிலக்கு அமல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இது குறித்து சண்டவுலியின் பவுரோலி மதுக்கடையில் பணிபுரியும் ராமேந்தர் வர்மா ‘தி இந்து’விடம் தொலைபேசியில் பேசுகையில், ‘கடந்த ஏப்ரல் 5-ல் பிஹாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படுவது வரை எங்கள் விற்பனை அதன் ஏலத்தொகையை செலுத்தவே போதாமல் இருந்தது. தற்போது இந்த நிலை மாறி அன்றாடம் மாலைவேளைகளில் பிஹாரில் இருந்து வந்து மது அருந்தி விட்டுச் செல்வோர் எண்ணிக்கை அதிகம் கூடியுள்ளது. இவர்களில், பிஹாரின் வெகு தூரத்தில் இருந்து சில கோப்பை மதுவிற்காக வருவோர்களும் அதிகம்.’ என கூறுகிறார்.
இந்நிலையில், இந்த எல்லைகளின் மது விற்பனை மாற்றத்தில் உ.பி. அரசு சார்பிலான மது விற்பனை விவரம் மலைக்க வைப்பதாக உள்ளது. சண்டவுலியின் பவுரஹா அரசு மதுக்கடைகளில் கடந்த வருடம் ஏப்ரலில் வெறும் 40 புட்டிகள் விற்பனையாகி இருந்தன. ஆனால், இந்த வருட ஏப்ரல் 28 தேதி வரையில் 1546 மது புட்டிகள் விற்பனையாகி உள்ளன. இது 3000 சதவிகிதத்திற்கும் அதிகம் ஆகும். இதன் அருகிலுள்ள நவுபத்பூர் அரசு மதுக்கடைகளில் கடந்த வருடத்தை விட இந்த வருட ஏப்ரல் 28 வரை 800 சதவிகிதம் கூடுதலாக மது புட்டிகள் விற்பனையாகி உள்ளன. இதேபோல் பலியாவின் பவுரோலியில் 600 சதவிகிதம் விற்பனை கூடியுள்ளது.
இந்த விலை விவரங்கள் குறிப்பாக பிஹார் எல்லையில் உள்ள மாவட்டங்களில் அரசு மதுக்கடைகளுக்காக என நேற்று முன் தினம் முதன் முறையாக நடைபெற்ற உ.பி. அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வெளியாகி உள்ளது. எல்லை ஓர மாவட்டங்களில் சராசரியான விற்பனை 13.8 சதவிகிதம் கடந்த 28 நாட்களில் கூடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. வரும் மே 15-ல் உ.பி. செல்லவிருக்கும் முதல்வர் நிதிஷ்குமார் அம் மாநில முதல்வர் அகிலேஷ்சிங் யாதவை சந்தித்து புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
நேபாள எல்லைகளிலும் மது
இதற்கிடையில், பிஹாரின் மற்றொரு எல்லையில் அமைந்துள்ள நம் நாட்டின் அண்டை நாடான நேபாளத்திலும் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் உருவான திடீர் குடிசைகளில் நேபாளில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு மது விற்பனை செய்யப்படுகிறது. இதை அருந்து பிஹார்வாசிகள் அன்றாடம் எல்லை தாண்டி சென்று வருகின்றனர்.