

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம் சுதந்திரமான விவாதங்களை முடக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் உட்பட முக்கியப் பேராசிரியர்கள் சிலர் துணை வேந்தருக்கு கடிதம் மூலம் கவலை தெரிவித்துள்ளனர்.
பல்கலைக் கழக துணை வேந்தர் ஜகதீஷ் குமாருக்கு இவர்கள் எழுதிய கடிதத்தில், “ஜே.என்.யூ.வின் பேராசிரியர்கள் என்ற தகுதியில் பல்கலைக் கழகங்களின் சில விவகாரங்கள், செயல்கள் எங்களை நிரம்பவும் தொந்தரவுகளுக்குள்ளாக்குகிறது. மாணவர்கள் ஆசிரியர்களிடையே சுதந்திர விவாதக் களத்தையே ஜே.என்.யூ. பல்கலைப் பண்பாடு வளர்த்துள்ளது. இப்படிப்பட்ட விவாதங்களின் போது பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஷய ஜீவிகளோ அல்லது வெளியிலிருந்து வரும் விஷய ஜீவிகளோ கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
ஆனால் 2016, பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற்ற இத்தகைய சுதந்திர விவாதக்களத்தின் மீதுதான் தற்போதைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுதந்திர விவாதங்களை நடப்பு நிர்வாகம் முடக்குவதோடு அதில் கலந்து கொள்பவர்களுக்கு தண்டனைகளையும் அளித்து வருகிறது. மாணவர்கள் தடைசெய்யப்படுகின்றனர், ஆசிரியர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். அந்த நிகழ்வு தொடர்பாக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த பிறகும் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகள் நிர்வாகத்தரப்பிலிருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது வெளியிலிருந்து வரும் நபர்கள் பல்கலைக் கழக வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபான நடைமுறைகளைக் நிர்வாகம் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.