

நியூயார்க்: வரும் 2023 வாக்கில் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை இந்தியா முந்தும் என ஐ.நா அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 36-வது உலக மக்கள்தொகை தினமான இன்று இதனை தெரிவித்துள்ளது ஐ.நா.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இப்போது சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகை எண்ணிக்கை 8 பில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள் தொகை பிரிவு வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 1950-களில் இருந்து உலக மக்கள் தொகை மெதுவான வளர்ச்சியை கண்டு வருவதாகவும். கடந்த 2020 வாக்கில் இதன் விகிதம் 1 சதவீதம் குறைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2030 வாக்கில் உலக மக்கள் தொகை 8.5 பில்லியனை எட்டும் என்றும், அதுவே 2050 வாக்கில் 9.7 பில்லியன் உயர்ந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 2080-களில் இந்த எண்ணிக்கை 10.4 பில்லியனை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பூமியின் எட்டாவது பில்லியன் பிறப்பை எதிர்பார்த்து உள்ள சூழலில் இந்த ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் எட்டப்படுகிறது. நமது பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டிய நேரம் இது. ஆரோக்கிய நலனில் முன்னேற்றம் கண்டுள்ளது ஆயுட் காலத்தை நீட்டித்துள்ளது. அதே நேரத்தில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை குறைத்துள்ளது.
நாம் அனைவரும் நமது பூமிக் கோளை கவனித்துக்கொள்ள அவரவருக்கு உள்ள பொறுப்பு குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது" என ஐ.நா பொது செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் 2023-இல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை இந்தியா முந்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இப்போது சீனா மற்றும் இந்தியாவின் பங்கு 29 சதவீதம். இரண்டு நாடுகளும் இப்போது தலா 1.4 பில்லியனுக்கு மேல் மக்கள் தொகையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா 1.412 பில்லியன், சீனா 1.426 பில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது.
எதிர்வரும் 2050 வாக்கில் இந்தியாவில் 1.668 பில்லியன் எனவும், சீனாவில் 1.317 எனவும் மக்கள் தொகை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ, எகிப்து, பாகிஸ்தான், இந்தியா, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா போன்ற நாடுகள்தான் 2050 வாக்கில் உலக மக்கள் தொகை அதிகரிக்க பாதிக்கும் மேல் காரணமாக இருக்கும் என தெரிவிக்கட்டுப்பட்டுள்ளது.
உலகளவிலான சராசரி ஆயுட்காலம் கடந்த 2019-இல் 72.8 என்ற எண்ணிக்கையை எட்டியது. இது வரும் 2050-இல் 77.2 என இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.