Published : 11 Jul 2022 03:50 PM
Last Updated : 11 Jul 2022 03:50 PM
பனாஜி: கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் ஆளும் பாஜக அணிக்கு தாவ முயன்ற வருவதாக கூறப்படும் நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோரை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் தலைமை இன்று கூறியுள்ளது.
கோவாவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 3 போ் ஆளும் பாஜகவுக்கு மாற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் அண்மையில் முதல்வராக இருந்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே கட்சியில் பிளவு ஏற்பட்டு அவா் பதவியை இழந்தாா். பாஜக ஆதரவுடன் அதிருப்தி சிவசேனா அணி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தநிலையில் கோவா மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் ஆளும் பாஜக அணிக்கு தாவ முயன்று வருவதாக கூறப்படுகிறது. 40 எம்எல்ஏக்கள் உள்ள கோவாவில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணில் 25 பேரும், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்களும் உள்ளனா்.
மாநில சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை முன்னிட்டு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒரு சில எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டனா். காங்கிரஸ் சாா்பில் முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட திகம்பா் காமத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதார் நாயக் மற்றும் ராஜேஷ் பல்தேசாய் ஆகிய 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோவா பாஜக முதல்வர் வீட்டில் அவரை ரகசியமாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலா் பாஜகவுக்கு மாற இருப்பதாகத் தகவல் வெளியானது. ஏழு எம்எல்ஏக்கள் பாஜக அணிக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் கோவா மாநில காங்கிரஸ் இந்தத் தகவலை மறுத்தது. ஆனால் கோவா சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை அக்கட்சி நீக்கியது.
கோவா காங்கிரஸ் மூத்த தலைவர்களான மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோரை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கட்சித் தலைமை இன்று கூறியுள்ளது. இதுகுறித்து கோவா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் பட்கர் கூறுகையில் “எங்கள் இரு மூத்த தலைவர்களை சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உள்ளோம்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT