Last Updated : 11 Jul, 2022 08:37 AM

 

Published : 11 Jul 2022 08:37 AM
Last Updated : 11 Jul 2022 08:37 AM

உ.பி. சட்டமேலவையில் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினரும் இல்லாத நிலை

புதுடெல்லி: உத்தரபிரதேச சட்ட மேலவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இல்லாத நிலை வரும் 13-ம் தேதிக்கு பிறகு ஏற்பட உள்ளது. இதுபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) பலம் வெறும் 1 ஆக சரிய உள்ளது.

உ.பி. சட்டமேலவையில் 10 எம்எல்சிக்களின் பதவிக் காலம் வரும் புதன்கிழமை (ஜுலை 13) முடிவடைகிறது. இதில் பாஜக 2, அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி 5, மாயாவதியின் பிஎஸ்பிக்கு 3, காங்கிரஸுக்கு 1 என 10 பேரின் பதவிக் காலம் முடிகிறது. இதையடுத்து பாஜக சார்பில் இருவரும் சமாஜ்வாதி சார்பில் 5 பேரும் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பாஜகவின் இருவரில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் சவுத்ரி பூபேந்திரா சிங்கும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஒரே உறுப்பினர் மீண்டும் தேர்வாக முடியாத நிலை உள்ளது.

உ.பி.யில் கடந்த 1887-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் சட்ட மேலவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 135 வருடங்களில் உ.பி. மேலவையில் காங்கிரஸுக்கு ஒரு உறுப்பினரும் இல்லாத பரிதாப நிலை உருவாக உள்ளது.

இதுபோல் பிஎஸ்பியின் 3 உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே மீண்டும் தேர்வாகும் வாய்ப்புள்ளது. உ.பி.யில் 5 முறை ஆட்சி புரிந்த பிஎஸ்பிக்கு சட்டமேலவையில் ஒரே ஒரு உறுப்பினர் என்ற நிலை உருவாக உள்ளது.

உ.பி.யில் கடைசியாக 1985-ல்காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் போபர்ஸ் ஊழல் புகாரை வி.பி.சிங் எழுப்பியதை தொடர்ந்து உ.பி.யில் காங்கிரஸின் சரிவு தொடங்கியது. காங்கிரஸுக்கு சுமார் 37 வருடங்களாக சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் நிலை தொடங்கியது.

1985 தேர்தலுக்குப் பிறகு உ.பி. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 269 எம்எல்ஏக்கள் இருந்தனர். இது படிப்படியாகக் குறைந்து, கடந்த மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் வெறும் 2 ஆகக் குறைந்துள்ளது.

தனது பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா தலைமையில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கப் போவதாக கூறிய காங்கிரஸுக்கு வெறும் 2.5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

உ.பி. மேலவையில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கு இருந்த50 எம்எல்சிக்கள் பலம் சமீபத்தில் முடிந்த தேர்தலில் 17 ஆக குறைந்துள்ளது. உ.பி.யில் சட்டப் பேரவை, சட்டமேலவை ஆகிய இரண்டிலும் ஆளும் பாஜக வலுவடைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x