டெல்லியில் போலீஸ் சாதுர்யத்தால் இளம்பெண் மீட்பு

டெல்லியில் போலீஸ் சாதுர்யத்தால் இளம்பெண் மீட்பு
Updated on
1 min read

டெல்லியில் போலீஸார் சாதுர்யத்தால் கடத்தப்பட்ட இளம் பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில், "டெல்லியில் புராரி பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் இளம் பெண் ஒருவர் அவரது நண்பருடன் நின்றிருந்தார். இருவரும் வடகிழக்கு டெல்லி செல்வதற்காக வாகனம் தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு கார் அந்த வழியாக வந்தது. காரில் வந்த நபர்கள் அவர்கள் இருவருக்கும் லிஃப்ட் தருவதாகக் கூறி ஏற்றிக்கொண்டனர். சிறிது தூரம் சென்றவுடன் இருவரது செல்போனையும் பறித்துக் கொண்டனர். பின்னர் பெண்ணுடன் வந்த அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டுள்ளனர்.

அந்த வேளையில் அவ்வழியாக ஒரு போலீஸ் ரோந்து வாகனம் வந்துள்ளது. அந்த வாகனத்தை நிறுத்தி நடந்தவற்றை அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீஸார் அந்த இளைஞரையும் ஏற்றிக் கொண்டு இளம் பெண் கடத்திச் செல்லப்பட்ட காரை பின் தொடர்ந்தனர். சில நிமிடங்களிலேயே அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

அந்த இரண்டு காவலர்களுக்குமே 50 வயதுக்கு மேல் இருப்பினும் காரில் வந்த நபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இளம் பெண்ணையும் விடுவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சிவ் குமார், சூரப் குமார் கோஸ்வாமி, சச்சின் குமார் என அடையாளம் தெரியவந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in