மழை, வெள்ளத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு: மகாராஷ்டிரா, தெலங்கானாவிற்கு எச்சரிக்கை விடுப்பு

மழை, வெள்ளத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு: மகாராஷ்டிரா, தெலங்கானாவிற்கு எச்சரிக்கை விடுப்பு
Updated on
1 min read

மழை, வெள்ளத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்கிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்குக்கரையோர மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

17 பேர் பலி: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. டெல்லி, ஹரியாணா மாநிலங்களில் நேற்று முதலே மழை பெய்து வருகிறது. மழை இன்றும் தொடர்கிறது.

மீண்டு வரும் அசாம்: அசாம் மாநிலத்தில் வெள்ள நிலைமை சீராகி வருகிறது. இருப்பினும் அங்கு இன்னும் 6 லட்சம் பேர் சொந்த இடங்களை விட்டு முகாம்களில் தங்கியுள்ளனர். 9 மாவட்டங்களில் 130 நிவாரண முகாம்கள் இயங்குகின்றன. அசாமில் இதுவரை மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 190 ஆக உள்ளது.

மகாராஷ்டிரா நிலவரம்: மகாராஷ்டிராவில் மழை வெள்ளம் காரணமாக 130 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 128 கிராமங்களில் கனமழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்சிரோலி, ஹிங்கோலி, நாண்டெட், மாரத்வாடா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 10 ஆம் தேதி வரை மகாராஷ்டிராவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா நிலவரம்: தெலங்கானா மாநிலத்தில் ஜெயசங்கர் பூபல்பள்ளி, நிசாம்பாத், ராஜண்ணா சிர்கிலா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருமாறு முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் பள்ளிகள் மூடல்: கனமழை காரணமாக கர்நாடக மாநிலம் உடுப்பி, கொடகு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொடகு, உடுப்பி, கார்வார் மாவட்டஙக்ளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கனமழை: கேரளாவில் கடந்த ஒருவாரமாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இன்று முதல் புதன்கிழமை வரை மாநிலத்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in