Published : 10 Jul 2022 05:51 AM
Last Updated : 10 Jul 2022 05:51 AM

அமர்நாத் வெள்ளப்பெருக்கு | 16 பக்தர்கள் உயிரிழப்பு, 40 பேர் மாயம் - நவீன தொழில்நுட்பத்துடன் மீட்புப் பணி தீவிரம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயில் அருகே நேற்று முன்தினம் மாலையில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டியது. இதில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 16 பக்தர்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

தெற்கு காஷ்மீரில் உள்ள இமய மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டு 43 நாள் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க வந்தனர்.

இந்நிலையில் மோசமான வானிலையால் அமர்நாத் குகைக் கோயில் அருகே நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கனமழை கொட்டியதில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கோயில் அருகில் பக்தர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் சமையல் கூடங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

இதில் இதுவரை 16 பேர்உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 40-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. சம்பவத்தை தொடர்ந்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, சிஆர்பிஎப், மாநில காவல் துறை என பல்வேறு படைப் பிரிவுகளின் வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். காயமுற்ற 21 பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலையில் பல்தல் கொண்டு வரப்பட்டனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் நரேந்திர மோடியும் வேதனை தெரிவித்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு மத்திய படைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். சம்பவம் குறித்து உறவினர்கள் தகவல் பெறுவதற்காக 4 ஹெல்ப்லைன் எண்களை காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் நவீன சாதனங்களை பயன்படுத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் எம்ரான் மசுவி கூறும்போது, “சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், சிறப்பு மீட்பு உபகரணங்களுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரேடார் கருவிகள், 2 மோப்ப நாய் படைகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. தெர்மல் இமேஜர்கள், நைட் விஷன் சாதனங்கள் என பல்வேறு உபகரணங்கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டன. நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் காலை 6.45 முதல் தரையிறங்கின. உயிரிழந்த 16 பேரின் சடலங்களும் காயம் அடைந்த 63 யாத்ரீகர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை அப்புறப்படுத்த ராணுவம் மற்றும் சிவிலியன் ஹெலிகாப்டர்கள் இடைவிடாது பணியாற்றின. மீட்புப் பணிகளை ராணுவ உயரதிகாரிகள் மேற்பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உதவிக்கு...

உதவி மற்றும் விசாரணைக்கு ராணுவத்தின் 91 9149720998 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். யாத்ரீகரின் பெயர், பதிவு எண், அவரது தொடர்பு எண், ஆதார் எண், கடைசியாக அவர் அறியப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்களை உறவினர்கள் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x