

சோலார் பேனல் ஊழல் வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆவணங் கள் மற்றும் ஆதாரங்களை முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் நேற்று விசாரணை ஆணையத்திடம் தாக்கல் செய்தார்.
கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கியதாக பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.
அத்துடன் முதல்வர் உம்மன் சாண்டி உட்பட சில முக்கிய தலைவர் கள் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கேரளாவில் இந்த விவகாரம் பெரும் புயலை ஏற்படுத்தியிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்களை முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து மறுத்து வருகிறார். மேலும் பாலியல் தொந்தரவு செய்ததாக செய்தி வெளியிட்ட இரண்டு டிவி சேனல்கள் மற்றும் சரிதா நாயர் மீது மானநஷ்ட வழக்கும் அவர் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இவ் வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங் களை நீதிபதி பி.சிவராஜன் தலைமையிலான விசாரணை ஆணையம் முன் சரிதா நாயர் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘விசாரணை ஆணை யம் முன் நான் தாக்கல் செய்த ஆதாரங்கள் மூலம் முதல்வர் உம்மன் சாண்டி உட்பட சில முக்கிய அரசியல் தலைவர்கள் நிச்சயம் சிக்குவார்கள். நாளை கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்யப் போகிறேன்’’ என்றார்.