Published : 09 Jul 2022 04:54 AM
Last Updated : 09 Jul 2022 04:54 AM
புதுடெல்லி: ஏக்நாத் ஷிண்டேவை மகாராஷ்டிரா முதல்வராக, ஆளுநர் நியமித்ததற்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.
பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பா.ஜ.க எம்எல்.ஏ ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக 99 ஓட்டுக்கள் விழுந்தன.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக நியமிக்க ஆளுநர் எடுத்த முடிவை எதிர்த்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தரப்பினர் அதன் பொதுச் செயலாளர் சுபாஷ் தேசாய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் எந்த கட்சியுடனும் இணையவில்லை. அதனால் அரசியல் சாசனத்தின் 10-வது சட்டப்பிரிவின் படி அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 39 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றதை சிவசேனா அங்கீகரிக்கவில்லை. அவர்களை, பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதித்துள்ளார். அவர்கள் கடந்த 3 மற்றும் 4-ம் தேதிகளில் மேற்கொண்ட சட்டப்பேரவை நடவடிக்கைகள், புதிய சபாநாயகரை தேர்வு செய்தது, பெரும்பான்மையை நிருபித்தது ஆகியவை செல்லத்தக்கதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுநாள் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT