மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் எம்.பி.க்களாக பதவியேற்பு

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் எம்.பி.க்களாக பதவியேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 57 பேரில் 27 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாநிலங்களவை தேர்தலில், 57 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் உட்பட 27 பேர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றவர்களில் 18 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் பதவி ஏற்றனர்.

மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் உட்பட 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 எம்.பி.க்கள் பல்வேறு மொழிகளில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 12 பேர் இந்தியிலும் சம்ஸ்கிருதம், கன்னடம், மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளில் தலா இருவரும் பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி களில் தலா ஒருவரும் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீதமுள்ள மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் பதவி ஏற்பார்கள் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in