வகுப்புவாத மோதல்: கர்நாடகாவில் 144 தடை உத்தரவு

வகுப்புவாத மோதல்: கர்நாடகாவில் 144 தடை உத்தரவு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இங்கு புதன்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை சிலர் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை வேறு மதத்தை சேர்ந்த சிலர் கண்டித்தனர்.

இரு தரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு மதத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். கல்வீசியும் தாக்கி கொண்டனர். 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த பழக்கடைகள், காய் வண்டிகள் ஆகியவற்றை சேதப்படுத்தி தீ வைத்தனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். தீயணைப்பு படையினர் கடைகள், வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, முதல்கட்டமாக 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கெரூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in