

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்களான கண்ணய்யா மற்றும் உமர் காலீத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நவ்நிர்மான் சேனாவின் தலைவர் அமித் ஜானி போலீஸில் சிக்கியுள்ளார். அவரை உபியின் மீரட் நகரில் டெல்லியின் சிறப்பு போலீஸார் கைது செய்தனர்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாளாக கடந்த பிப்ரவரி 9-ல் ஜேஎன்யூவின் ஒரு பிரிவு மாணவர்கள் அனுசரித்தனர்.
இதில் தேசவிரோத கோஷங்கள் இடப்பட்டதாக அதன் மாணவர் தலைவர் கண்ணய்யா குமார், துணைத்தலைவர் அனிருத் பட்டாச்சார்யா மற்றும் உமர் காலீத் உட்பட ஏழு பேர் மீது வழக்குகள் பதிவானது.
இதில், கண்ணய்யா, காலீத் மற்றும் பட்டாச்சார்யா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர். இதனால், கிளம்பிய பல சர்ச்சைகளுக்கு இடையே குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பலர் கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர்.
இதில் ஒன்றாக உபியின் மீரட்டில் உள்ள அமைப்பான நவ்நிர்மானாவின் தலைவரான அமித் ஜானி என்பவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் அவர், வழக்கில் சிக்கிய மாணவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஜேஎன்யூ வளாகத்தை காலி செய்து விட வேண்டும் எனவும், இல்லையேல் அவர்களை சுட்டுக் கொல்ல 10 ஆட்களுக்கு பணம் அளித்து அனுப்ப இருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதன் மீது கண்ணய்யா மற்றும் காலீத் சார்பில் டெல்லி போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதன் மீது விசாரணை நடத்தி வந்த டெல்லியின் சிறப்பு போலீஸார், நேற்று இரவு (வியாழக்கிழமை) கிரேட்டர் கைலாஷ் பகுதியில் தங்கியிருந்த ஜானியை கைது செய்தனர்.
ஜேஎன்யூ மாணவர்கள் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜானி அளித்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. அப்போது முதல் தலைமறைவாக இருந்த ஜானி நேற்று சிக்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14-ல் ஜேஎன்யூ செல்லும் டெல்லி அரசுப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கன்னய்யா, காலீத்திற்கு கொலைமிரட்டல் கடிதமும் கிடைத்திருந்தது.
மகராஷ்ட்ராவில் இந்தி மொழி பேசுபவர்களை அம் மாநிலத்தை விட்டு வெளியேறி வலியுறுத்தி கடந்த 2010-ல் சிவசேனாவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அப்போது உபியின் மீரட்டில் உள்ள சிவசேனா அலுவலகம் மீது பதில் தாக்குதல் நடத்தி பிரபலமானவர் அமித் ஜானி.
இவரது நவ்நிர்மான் சேனாவின் மீது உபி மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் இந்து மஹாசபா ஆகியோரால் பல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளன.
2012-ல் உபியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார் ஜானி.