

பெங்களூரு: கடலோர கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். கடலோர கர்நாடகாவில் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனே அப்புறப்படுத்தி வேறு இடங்களில் தங்கவைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2009ல் கடலோர கர்நாடகாவில் வரலாறு காணாத மழை பெய்தது. அப்போது 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேறும் சூழல் உருவானது. ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் மீண்டும் அவர்கள் அங்கேயே சென்று தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தரமாக மேடான பகுதிகளில் குடியிருப்புகளை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள துணை ஆணையர்கள் மீட்புப் பணிகளை கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கர்நாடகாவின் கடோலரப் பகுதிகளைப் போல் மலநாடு பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சிகாலு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை, நான் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் துணை ஆணையர்களிடம் பேசியுள்ளேன். ஏற்கெனவே மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன. கொடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை விடாமல் பெய்வதால் மீட்பிலும் சவால்கள் அதிகமாக உள்ளன. மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினரும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.