Published : 07 Jul 2022 04:41 AM
Last Updated : 07 Jul 2022 04:41 AM
புதுடெல்லி: மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மத்திய எஃகுத் துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கும், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் (64) மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். முக்தார் அப்பாஸ் நக்வியை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பாஜக தேர்வு செய்யவில்லை. அதனால், அவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்து விவகாரத்தால் ஆளும் பாஜகவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரை நிறுத்துவது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது.
நக்வி தவிர கேரள ஆளுநர் ஆர் முகமது கான், முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோரது பெயர்களும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.
மத்திய எஃகுத் துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங்கும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் இன்றுடன் முடிவடைகிறது. இருவரின் ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். நக்வியிடம் இருந்த சிறுபான்மையினர் நலத்துறை, அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமும் எஃகுத்துறை ஜோதிர் ஆதித்யா சிந்தியாவிடமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT