

வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் நபர்களை பரஸ்பரம் ஒப்படைப்பது தொடர்பாக பிரிட்டன் இந்தியா இடையே கடந்த 1993-ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இதுவரை இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இங்கு குற்றம்சாட்டப்பட்ட ஒருவரைக்கூட அந்த நாடு ஒப்படைக்கவில்லை.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, தொழிலதிபர் விஜய் மல்லையா உட்பட இந்தியாவில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பலர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அவர்களை ஒப்படைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை வைத்த போதிலும் அதை அந்த நாடு நிராகரித்து விட்டது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பிரிட்டனுக்கு தப்பிச் செல்லும் இந்தியர்கள், தங்களை இந்தியா விடம் ஒப்படைத்தால் அரசு அல்லது விசாரணை அமைப்புகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத் துடன் துன்புறுத்துவார்கள் என்றும் மனித உரிமை மீறல்கள் நடக்கும் என்றும் பிரிட்டன் அரசிடம் கூறுகின்றனர்.
இதனால் அவர்களை இந்தியா விடம் ஒப்படைக்க பிரிட்டன் மறுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதும் இதற்கு மற்றொரு காரணமாக உள்ளது.
பொதுவாக, குற்றம்சாட்டப் பட்ட நபர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி பிரிட்டன் நீதிமன்றங்கள் நிரா கரித்து விடுவதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போதைய நிலவரப்படி இங்கு குற்றம்சாட்டப்பட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள 131 பேரை ஒப்படைக்குமாறு இந்திய அரசு விடுத்த கோரிக்கை நிலுவையில் உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வுக்கு வந்திருந்த பிரிட்டன் குடியேற்றத் துறை இணை அமைச்சர் ஜேம்ஸ் புரோக்கன் ஷைரிடம், மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தப் பிரச்சினையை எடுத்துக் கூறினார். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
முக்கிய நபர்கள்
இந்திய அரசு ஒப்படைக்கக் கோரும் நபர்களில், கடற்படை ரகசியங்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ரவி சங்கரன், குஜராத் வெடிகுண்டு தாக்குதல் (1993) வழக்கில் தொடர் புடைய டைகர் ஹனீப், ஐபிஎல் ஊழலில் தேடப்படும் லலித் மோடி, வங்கிக் கடனை திருப்பிச் செலுத் தாத வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள மல்லையா உள்ளிட் டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.