Published : 07 Jul 2022 06:59 AM
Last Updated : 07 Jul 2022 06:59 AM

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக இளையராஜா, பி.டி. உஷா தேர்வு - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

பி.டி.உஷா

புதுடெல்லி: மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் விஜயேந்திர பிரசாத், கொடையாளரும், கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோரை நியமன எம்.பி.க்களாக நியமித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதையடுத்து நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டோருக்கு எனது வாழ்த்துகள். இசையமைப்பாளர் இளையராஜா என்ற படைப்பு மேதை, தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்து வருபவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவர் ஏழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இந்த அளவுக்கு சாதனை படைத்துள்ளார். அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல, ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகமாக இருக்கிறார் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா. தடகள விளையாட்டில் அவர் செய்த சாதனைகள் பரவலாக அறியப்பட்டுள்ளன. இளம் வீரர், வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வரும் அவரது பணி பாராட்டத்தக்கது. மாநிலங்களவை எம்.பி.யாக அவர் நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x