

ஜெய்ப்பூர்: அஜ்மீர் தர்காவில் ஊழியராக பணியாற்றுபவர் சல்மான் சிஸ்தி. இவர் முகமது நபியை விமர்சனம் செய்த பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீட்டையும், சொத்தையும் தருவதாக வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ கன்னையா லால் படுகொலை சம்பவத்துக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில்தான் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சல்மான் சிஸ்தி மீது போலீஸார் சில நாட்களுக்கு முன் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, துப்பாக்கிச் சூடு என பல குற்ற வழக்குகள் உள்ளன. குடி போதையில் இந்த வீடியோவை தான் பதிவு செய்து வெளியிட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் சல்மான் சிஸ்தி கூறியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அஜ்மீர் தர்காவின் பாதுகாப்பாளர் சையத் ஜைனுல் அபேதின் கூறுகையில், ‘‘சல்மான் சிஸ்தி கூறியதற்கும், அஜ்மீர் தர்காவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் கூறியதை அஜ்மீர் தர்காவின் கருத்தாக கருதக்கூடாது. இந்த தர்கா மதநல்லிணக்கத்தின் புனிதமான இடம். இங்கு அனைத்து மதத்தினரும் ஆன்மீக நம்பிக்கையுடன் வருகின்றனர். சல்மான் சிஸ்தி கூறியதை தனிநபர் கருத்தாக கருத வேண்டும்’’ என்றார்.