Published : 06 Jul 2022 05:52 AM
Last Updated : 06 Jul 2022 05:52 AM

ஊழல்வாதிகளிடமிருந்து ஏழைகளை காப்பாற்றிய ‘டிஜிட்டல் இந்தியா’ - குஜராத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

காந்திநகர்: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

குஜராத்தின் காந்திநகரில் ‘டிஜிட்டல் இந்தியா வாரம் 2022’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:

மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்புச் சான்றிதழ், கட்டணம் செலுத்துதல், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, தேர்வு முடிவுகள், வருமான வரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுதல், வங்கி சேவை உள்ளிட்டவற்றுக்காக வரிசையில் நின்று காத்திருந்தோம்.

ஆனால், டிஜிட்டல் வசதியை பயன்படுத்த தொடங்கிய பிறகு வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்குவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது மட்டுமின்றி, இடைத்தரகர்களையும் ஒழித்துள்ளது.

தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவதே புரட்சியாகும். தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த பழகிக்கொள்ளவில்லை என்றால், காலம் நமக்காக காத்திருக்காது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் குஜராத் மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது.

21-ம் நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா வாழ்வை எளிதாக்கி இருக்கிறது. இன்று கிராமங்களிலேயே மக்கள் பல சேவைகளை டிஜிட்டல் முறையில் பெற்று வருகின்றனர். ஆன்லைன் சேவைகள் காரணமாக இந்தியாவில் ஊழல் ஒழிந்துள்ளது. 4-வது தொழிற் புரட்சியை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது.

ரூ.23 லட்சம் கோடி..

டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை கொண்டு வரப்பட்டபோது முன்னாள் நிதியமைச்சர் (ப.சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார் பிரதமர்) இந்தத் திட்டம் எப்படி இங்கு சாத்தியமாகும். இங்கு போதிய செல்போன்களே இல்லை என்றார். அவர் அதிகம் படித்தவர். அவரே இப்படிப் பேசினார். ஆனால், கடந்த மே மாதத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1.2 லட்சம் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய் நிதி ஆன்லைன் மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.2.25 லட்சம் கோடி, தவறானவர்கள் கைகளில் கிடைப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தியவுடன் இந்தியா எப்படி சான்றிதழ் வழங்குகிறது என்று உலகமே வியந்து பேசிக் கொண்டிருக்க, சிலர் அந்த சான்றிதழில் ஏன் பிரதமர் மோடியின் படம் இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.

ஒருவர் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட உடனேயே அவரது செல்போனுக்கு சான்றிதழ் வந்து சேர்ந்துவிடுகிறது. இந்த வசதி டிஜிட்டல் புரட்சியால் வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x