

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு, வேறு எந்த மாநிலத்தை விடவும் சீராக உள்ளது என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர் வன்முறைகள் மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த அறிக்கையை அளிக்குமாறு உள்துறை அமைச்சகம் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், லக்னோவில் நடந்த முதலீட்டாளர்கள் உடனான சந்திப்பில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்து அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, உத்தரப் பிரதேசத்தில்தான் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது. அதனால்தான் முதலீட்டளர்கள் இங்கு தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தைப் பற்றி பல்வேறு வகையான பிரச்சாரங்கள் இருந்தாலும், இந்த மாநிலத்தினுடைய மேன்மை இங்கு கூடி இருக்கும் முதலீட்டாளர்கள் மூலமே தெரிந்துக்கொள்ளலாம். இது, இந்த மாநில மக்களுக்கு தெரிந்ததே" என்றார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.