

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் வழக்குகளை விசாரிக்க மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வி.எம்.சுதீரன் வாக்குறுதி அளித்துள்ளார்.
கேரளாவில் வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக நடந்து வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சியை பிடித்தால் மாநில அளவிலான ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசியல் நெருக்கடி காரணமாகவே நில ஆர்ஜித விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள நேர்ந்தது. தற்போதைய ஊழல் கண்காணிப்பு முறைகள் நேர்த்தியாக உள்ளன. எனினும் தனி ஆணையம் அமைக்கப்படும்போது ஊழல் தொடர்பான வழக்குகளை நியாயமான முறையில் முடித்து வைப்பதை உறுதி செய்ய முடியும். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சைகள், குற்றச்சாட்டுகளில் சிக்காத வண்ணம் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2 ஆண்டு ஆட்சிக்கான மதிப்பீடு என்னவென்பதும் தெரியவரும். சோமாலியாவை விட கேரள பழங்குடியின சமூகத்தில் தான் குழந்தைகள் இறப்பு சதவீதம் அதிகமாக இருப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கருத்துகள் மாநில பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றார்.