Published : 05 Jul 2022 12:12 PM
Last Updated : 05 Jul 2022 12:12 PM

உலகின் வசிக்கத்தக்க சிறந்த நகரங்களின் பட்டியல்: சென்னை, பெங்களூருக்கு எந்த இடம்? 

உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது.

பொருளாதார புலனாய்வு அமைப்பு உலகம் முழுவதும் மொத்தம் 173 நகரங்களில் வாழ்க்கை நிலைமைகளை ஆய்வு செய்து இந்த ஆண்டுக்கான உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வாழக் கூடிய தரத்தின் அடிப்படையில் தரவரிசையில் இடம்பெறும்.

குறிப்பாக நகரத்தின் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட அம்சங்களை வைத்து மதிப்பிட்டுள்ளது. இதில் முதல் 100 இடங்களில் வாழ தகுந்த நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்திய நகரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப்பட்டியல் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் எந்தவொரு இந்திய நகரமும் முதல் 100 இடங்களுக்குள் இல்லை. அனைத்து இந்தியா நகரங்களும் 140-146 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் உள்ள இந்திய நகரங்களில் பெங்களூர் கடைசி இடத்தில் உள்ளது.

இந்திய நகரங்களில் 56.5 வாழ்வாதார மதிப்பெண்ணுடன் டெல்லி 140ஆவது இடத்தைப் பெற்றது. அதைத்தொடர்ந்து மும்பை 141 (56.2) உள்ளது. சென்னை 142 (55.8), அகமதாபாத் 143 (55.7) உள்ளன. பெங்களூரு 146 (54.4) இடங்களைப் பெற்றுள்ளது.

பெங்களூர் நகரின் உள்கட்டமைப்பில் அது மிக மோசமான இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பில் பெங்களூர் 46.4 (100 இல்) மதிப்பெண்களை மட்டுமே பெற்றது. டெல்லி அதிகபட்சமாக 62.5 மதிப்பெண் பெற்ற நிலையில், மும்பை 55.4 மதிப்பெண்ணும் சென்னை மற்றும் அகமதாபாத் இரண்டும் தலா 50 மதிப்பெண் பெற்றன.

பாகிஸ்தானின் கராச்சி நகர் கூட பெங்களூரை விட உட்கட்டமைப்பில் சிறப்பாக உள்ளது. கராச்சி உள்கட்டமைப்பில் 51.8 மார்க்கை பெற்றுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ் நகரம் பெங்களூரைப் போல 46.4 மார்க்கை பெற்றுள்ளது.

கல்வி மருத்துவப் பாதுகாப்பு அளவுகோலில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் தலா 58.3 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. மும்பை மற்றும் அகமதாபாத் தலா 54.2 மதிப்பெண் பெற்றன. கல்வியில் டெல்லி, சென்னை மற்றும் பெங்களூரு தலா 75 மதிப்பெண்களைப் பெற்றன. மும்பை மற்றும் அகமதாபாத் இரண்டும் 66.7 மதிப்பெண்களைப் பெற்றன.

சிறிய குற்றங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல், ராணுவ மோதல் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றின் மூலம் அளவிடப்பட்ட நகரத்தின் உறுதி மதிப்பிடப்படுகிறது. இந்த அளவீட்டில் அகமதாபாத் (65) புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை தலா 60 புள்ளிகளும், குறைந்தபட்சமாக டெல்லி 50 புள்ளிகளும் பெற்றுள்ளன.

வானிலை, ஊழல், சமூக மற்றும் மத கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை கொண்ட கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அகமதாபாத் குறைந்தபட்சமாக 44.4 பெற்றுள்ளது. மும்பை (50.7), டெல்லி (48.6), பெங்களூர் (47.2), சென்னை (46.5) மார்க் எடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x