Published : 05 Jul 2022 11:22 AM
Last Updated : 05 Jul 2022 11:22 AM

'மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை' - காளி போஸ்டர் சர்ச்சையில் நுஷ்ரத் ஜஹான் கருத்து

மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று 'காளி' போஸ்டர் சர்ச்சை குறித்து நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹான் கூறியுள்ளார்.

காளி போஸ்டர் சர்ச்சை: நேற்று, இயக்குநர் லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்பட போஸ்டர் வெளியானது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் LGBTQ+ சமூகத்தினரின் (தன்பாலின உறவாளர்கள்) பெருமித அடையாளக் கொடியும் இருக்கிறது. இந்தப் படம் இணையத்தில் வைரலானது. இதற்கு இந்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இணையத்தில் #ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்தச் சூழலில் இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்ட நுஷ்ரத் ஜஹானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஏனெனில் 2020 செப்டம்பரில், துர்கா போல் வேடமணிந்து ஃபோட்டோ ஷூட் நடத்தியதற்காக நுஷ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனால் அவரிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.

மத உணர்வுகளை புண்படுத்த மாட்டேன்: நிகழ்ச்சியில் பேசிய நுஷ்ரத் ஜஹான், "மதத்தை இழுத்து அதை வியாபாரப் பொருளாக்கக் கூடாது என நினைக்கிறேன். நான் எப்போதுமே புதிய முயற்சிகளை, தனித்துவ படைப்புகளை வரவேற்பேன். அதே வேளையில் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதை நம்புகிறேன். நீங்கள் ஏதேனும் புதுமையாக படைக்க விரும்ப்னால் நீங்கள் உங்கள் செயல்களுக்கான பொறுப்பை உங்கள் தோள்களில் சுமக்கத் தயாராகுங்கள். என்னைப் பொறுத்தவரை நான் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த மாட்டேன். படைப்புத் திறனையும் மதத்தையும் சேர்க்க மாட்டேன்" என்றார்.

இணையத்தில் ட்ரோல் செய்வோரை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "நான் எதையும் கையாளத் தேவையில்ல. என்னை ட்ரோல் செய்பவர்கள் தானே அந்த நிலைமையை கையாள வேண்டும். ட்ரோல் செய்யப்படும்போது நமக்கு இரண்டு வாய்ப்புள்ளது ஒன்று அதற்கு வீழ்ந்துவிடுவது இல்லை அதிலிருந்து கற்றுக் கொள்வது. எப்படியிருந்தாலும் நீங்கள் ட்ரோல்களின் தாக்கத்தை அனுபவித்துத் தான் தீர வேண்டும். என்னுடை வாழ்க்கைக்கான மந்திரம் யாரையும் காயப்படுத்தக் கூடாது. அப்படியென்றால் காயங்கள் இல்லாமல் வாழலாம் என்பது மட்டுமே" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x