

மீண்டும் பயன்படுத்தக்கூடிய புதிய விண்கலத்தை தயாரிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் 15 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தது தெரியவந்துள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை காலை பரிசோதித்துப் பார்க்கப்பட உள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த இயற்கை எழில் கொஞ்சும் மீனவ கிராமமான தும்பா என்ற இடத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ளது. நாட்டின் முக்கிய ராக்கெட் வடிவமைப்பு மையமாக விளங்கும் இங்குதான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விண்கலத்தை தயாரிப்ப தற்கான திட்டம் தொடங்கியது.
6.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த விண்கலத்தின் எடை 1.75 டன் ஆகும். ரூ.95 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்தை வடிவமைக்க 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. திட்ட இயக்குநர் ஷ்யாம் மோகன் (53) தலைமையிலான 600-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் அயராத உழைப்பினால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றி வரும் ஷ்யாம் மோகன் கூறும்போது, “கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விண்கலத்தை வடிவமைக்க முடிவு செய்தேன். எனது கனவு இன்று நனவாகி உள்ளது. மீண்டும் பயன்படுத்தும் விண்கலத்தைத் தயாரிப்பது என்பது மிகவும் சிக்கலான, சவாலான பணி ஆகும்” என்றார்.
விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் கே.சிவன் கூறும்போது, “எங்களுடைய பெரிய திட்டத்தை நோக்கிய பயணத்துக்கான முதல் குழந்தை தான் இந்த விண்கலம்” என்றார்.
இப்போது பல்வேறு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்து வதற்காக ராக்கெட்டுகள் பயன் படுத்தப்படுகின்றன. பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் இந்த ராக்கெட்டை மறுமுறை பயன்படுத்த முடியாது.
இந்நிலையில், செலவைக் குறைப்பதற்காக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய விண்கலத்தை (ஆர்எல்வி - டிடி) இஸ்ரோ விஞ்ஞானிகள் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் வடிவமைத்துள்ளனர்.
இந்த விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாளை காலை 9.30 மணியளவில் விண் ணில் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
எனினும் முதன்முறையாக அனுப்பப்படும் இந்த விண்கலம் மீட்கப்படமாட்டாது. 40 மீட்டர் நீளம் கொண்ட விண்கலத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நமது விஞ்ஞானிகளின் திட்டம். இதற்கு முன் 3 முறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.