Published : 18 Jun 2014 05:43 PM
Last Updated : 18 Jun 2014 05:43 PM

இராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மீட்க மத்திய அரசு தீவிரம்

உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் இராக் நாட்டில் உள்ள மோசுல் நகரிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 40 பேரை தீவிரவாதிகள் கடத்தினர்.

பாக்தாத்தில் ஷியா பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசுக்கும் சன்னி பிரிவு தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. அல் காய்தா ஆதரவுடன் இயங்கும் தீவிரவாதிகள் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

சண்டையில் சீர்குலைந்த பகுதிகளிலிருந்து பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்ட போது இந்திய தொழிலாளர்களை ஐஎஸ்ஐஎல் தீவிரவாதிகள் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இராக் நிலைமை பற்றி வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இராக்கில் தவிக்கும் தொழிலாளர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஏ.கே.தோவல் இறங்கியுள்ளார்.

பாக்தாத்தின் வட மேற்கே 400 கிமீ தொலைவில் உள்ளது மோசுல் நகரம். இது தற்போது சன்னி பிரிவு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்கள் இருக்கும் இடம் பற்றியோ அவர்களை விடுவிக்க தீவிரவாதிகள் பிணைத் தொகை கோரிக்கை வைத்துள்ளனரா என்பது பற்றியோ எந்த தகவலும் வரவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் நிருபர்களிடம் கூறியதாவது: கடத்தல் தொடர்பான முழு விவரம் பெற இராக் அரசு மற்றும் பல்வேறு மனித நேய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம்.

இராக் நிலைமையை கண்காணிக்க டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பாக்தாத்தைச் சேர்ந்த தரீக் நூர் அல் ஹுடா என்ற நிறுவனத்தில் இவர்கள் பணிபுரிந்து வந்தனர்.

ஐஎஸ்ஐஎல் தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள பகுதிகளில் சுமார் 100 இந்தியர்கள் வசிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் பலருடன் தொடர்பில் இருக்கிறோம். இவர்களில் 46 பேர் நர்ஸ் பணிபுரிபவர்கள். இந்தியத் தொழிலாளர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் உதவிட இராக் நாட்டுக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டியை அனுப்பி இருக்கிறோம்.

தாயகம் திரும்ப முடியாமல் திக்ரித் நகரில் சிக்கித் தவிக்கும் நர்ஸ் பணியாளர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செம்பிறை அமைப்பு செய்து வருகிறது.

இவ்வாறு அக்பருதீன் தெரிவித்தார்.

பிரதமருக்கு கோரிக்கை

இதனிடையே, முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் சொந்த ஊரான திக்ரித்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் 46 இந்திய நர்ஸ் பணியாளர்கள், தாங்கள் ஊர் திரும்ப உதவும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கோரிக்கை அனுப்பியுள்ளனர்.

ஐஎஸ்ஐஎல் தீவிரவாதிகள் சாலைகளில் எப்போதும் திரிவதால் தொடர்ந்து அச்சத்தில் இருப்பதாகவும் சிறைக் கைதிகள் போல் அடைபட்டுக் கிடப்பதாகவும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

பாதுகாப்பாக உள்ளனர்

இந்தியாவைச் சேர்ந்த நர்ஸ் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இராக் எண்ணெய் நிறுவனங்கள், மருத்துவ மனைகளில் சுமார் 18,000 இந்தியர்கள் இருப்பதாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x