Published : 03 Jul 2022 06:08 PM
Last Updated : 03 Jul 2022 06:08 PM

‘‘40 ஆண்டுகள் இனி பாஜக சகாப்தம் தான்; தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்’’- அமித் ஷா நம்பிக்கை

ஹைதராபாத்: நமது நாட்டில் இன்னும் 40 ஆண்டுகளுக்கு பாஜக சகாப்தம் தான், இனி தென்னிந்தியாவில் பாஜக வளரும், தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இதனை அசாம் முதல்வர் ஹிமானந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறினார். கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

வாரிசு அரசியல், சாதி வெறி, திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவையால் பல ஆண்டுகளாக நாடு அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன. குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது அனைத்து குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் போது மோடி அமைதியாக இருந்தார். அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் வன்முறையை பரப்பியது.

எதிர்க்கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது. கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடுகிறார்கள். ஆனால் கட்சித் தலைவரை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. காங்கிரஸுக்கு மோடி குறித்த பயம் உள்ளது. தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் சகாப்தமாக இருக்கும். இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும். பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x